திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக மகாராஜன் (55) என்பவர் பதவி வகித்து வந்தார். அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜனை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இசக்கி பாண்டியன், அருகில் இருந்த கட்டுமானப் பகுதியிலிருந்து செங்கல்லை எடுத்து மகாராஜனின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார்.
தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த மகாராஜனை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வள்ளியூர் காவல்துறையினர், தலைமறைவாக உள்ள இசக்கி பாண்டியனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
