டீக்கடைக்கு வந்த நபர்… பாக்கெட்டிலிருந்து வெளியே வந்த எமன்… அலறியடித்து ஓடிய மக்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!

By Nanthini on சித்திரை 25, 2026

Spread the love

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஓதாயி பகுதியில், டீ கடைக்கு வந்த தொழிலாளி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் பாம்பை ஒளித்து வைத்து எடுத்து வந்த விபரீத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமிதுல் இஸ்லாம் (28) என்ற அந்த நபர், டீக்கடையில் அமர்ந்திருந்தபோது தனது பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஏதோ ஒரு பொருளை அசைத்துக் கொண்டே இருந்துள்ளார். இதைக் கண்டு சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள் கேட்டபோது, தன்னிடம் பாம்பு இருப்பதாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

முதலில் அவர் விளையாட்டாகச் சொல்கிறார் என்று நினைத்த சக வாடிக்கையாளர்கள், அந்தப் பாம்பைக் காட்டுமாறு கூறியுள்ளனர். எதிர்பாராத விதமாக, அவர் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு பாம்பை வெளியே எடுத்தவுடன் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். பாக்கெட்டிற்குள் நீண்ட நேரம் அடைக்கப்பட்டிருந்ததால் கடும் சீற்றத்துடன் இருந்த அந்தப் பாம்பு, அமிதுல் இஸ்லாமின் கையை ஆக்ரோஷமாகப் பல இடங்களில் கடித்தது. ரத்தம் கொட்டிய போதிலும், போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர் வலியைக் காட்டிக்கொள்ளாமல் பாம்புடன் விளையாட முயன்றது காண்போரை திகைக்க வைத்தது.

   

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் தலையிட்டு பாம்பை மீட்ட நிலையில், அதிக அழுத்தம் காரணமாக அந்தப் பாம்பு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. பலத்த காயமடைந்த இஸ்லாம் சிகிச்சைக்காக முதலில் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட தீவிர மருத்துவப் பரிசோதனையில், அவரைக் கடித்தது விஷமில்லாத ‘மண்ணுளிப் பாம்பு’ குட்டி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் உயிர் தப்பினார். தற்போது அவர் அபாயக் கட்டத்தைத் தாண்டி சிகிச்சைப் பெற்று வருகிறார்.

   

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் மது போதையில் இருந்திருக்கலாம் என்றும், அந்தப் போதையில்தான் காட்டில் இருந்த பாம்பைப் பிடித்து பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டு ஊருக்குள் வந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. ஒரு உயிரினத்தை வதைத்ததோடு மட்டுமல்லாமல், பொது இடத்திற்குப் பாம்பைக் கொண்டு வந்து மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்தச் செயல் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது.