குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பெண் வழக்கறிஞர் ஒருவரின் காரில் இருந்து சென்சார் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், காரின் மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோர்பி ஏ-டிவிஷன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண் வழக்கறிஞர் ஒருவரின் கார் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. அக்கார் சென்சார் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தொடர்ந்து ஒலி எழுப்பிக்கொண்டே இருந்துள்ளது. இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கையில் பெட்ரோல் கேனுடன் வந்து காரின் மீது ஊற்றித் தீவைத்துள்ளார்.
கார் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதும், சிறிதும் பயமின்றி அந்த நபர் தனது செல்போனை எடுத்து எரியும் காரை வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த மோர்பி ஏ-டிவிஷன் காவல்துறையினர் அந்த நபரை அதிரடியாகக் கைது செய்து தீவிர சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
