“அண்ணன் மாதிரி”… இன்ஸ்டாகிராம் காதல்… வாட்ஸ்அப் சாட்டிங்…. காதலி சொன்ன ஒரு வார்த்தை… செல்போனை பார்த்த காதலன் செய்த கொடூரம்….!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் புழக்கம் போன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், குற்றங்களின் வீரியம் குறைந்தபாடில்லை என்பதை உணர்த்தும் வகையில், கோவையில் ஒரு அதிர்ச்சி மரணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானதாகக் கூறப்பட்ட புகைப்படக் கலைஞர் பிரவீன்குமார், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் ரயில்வே தண்டவாளத்தில் மீட்கப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், தடாகம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான புகைப்படக் கலைஞர் பிரவீன்குமார், கடந்த 3-ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கிணத்துக்கடவு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிரவீனின் சடலம் மீட்கப்பட்டது. ஆரம்பத்தில் போத்தனூர் ரயில்வே காவல்துறையினர் இதனை ஒரு தற்கொலை வழக்காகக் கருதி விசாரித்து வந்தனர். ஆனால், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கரூரைச் சேர்ந்த மனோஜ் ஆகிய இருவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

   

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்த கொலைக்கான பின்னணி காதல் விவகாரம் என்பது தெரியவந்துள்ளது. சின்னத்தடாகம் பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை, கரூரைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவர் கடந்த நான்கு வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மனோஜ் தன் காதலியைச் சந்திக்க வந்தபோது, அந்தப் பெண்ணின் செல்போனுக்கு பிரவீன்குமார் அழைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மனோஜிடம், அந்தப் பெண் “பிரவீன் எனக்கு அண்ணன் மாதிரி” என்று கூறி மழுப்பியுள்ளார். எனினும், சந்தேகமடைந்த மனோஜ் அந்தப் பெண்ணின் செல்போனைச் சோதித்தபோது, பிரவீன் அந்தப் பெண்ணை காதலித்து வந்ததற்கான உரையாடல்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

   

இந்த முன்விரோதம் காரணமாக பிரவீனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனோஜ், தனது நண்பன் கார்த்திகேயனுடன் சேர்ந்து ஒரு சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் போட்டோ ஷூட் ஆர்டர் இருப்பதாகக் கூறி, பிரவீனை தந்திரமாக வரவழைத்துள்ளனர். அதை நம்பி வந்த பிரவீனை காரிலேயே வைத்து இருவரும் படுகொலை செய்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதி இரவு இந்த கொலையை அரங்கேற்றியவர்கள், மறுநாள் அதிகாலை பிரவீனின் உடலை தற்கொலை போல ஜோடிப்பதற்காக கிணத்துக்கடவு ரயில் தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளனர். கடந்த நான்கு நாட்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள், போலீஸ் விசாரணைக்கு அஞ்சி நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.