“ஐயோ… அது கித்தார் பை சார்… ஆள் இல்லை…” AI கேமரா செய்த குளறுபடி… அபராதம் விதித்த போலீஸ்…. இணையத்தில் வைரலாகும் பதிவு…!!

By Devi Ramu on புரட்டாதி 28, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து விதியை மீறுபவர்களைக் கண்டறிய அதிநவீன செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஏஐ கேமரா செய்த விசித்திரமான குளறுபடி ஒன்று இணையத்தில் நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பலையையும் காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த சௌவிக் தத்தா என்பவர், தனது மனைவியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தனியாகப் பயணித்துள்ளார். அவர் தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில், தனது முதுகில் கித்தார் பையை மாட்டி எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவரது மனைவிக்குத் போக்குவரத்துப் போலிஸாரிடமிருந்து அபராதச் செல்லான் ஒன்று வந்துள்ளது. அதில், “பின்பக்கம் அமர்ந்து பயணித்த நபர் ஹெல்மெட் அணியவில்லை” எனக் கூறி ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

   

அந்தச் சலானில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சௌவிக், அதில் தானாகவே தனியாகச் செல்வதும், முதுகில் இருக்கும் கித்தார் பையையே ஏஐ கேமரா மனிதனாகத் தவறாகக் கணித்து அபராதம் விதித்துள்ளதையும் கண்டு திகைத்துப் போனார். இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் சலான் ஆதாரங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், பெங்களூரு போக்குவரத்துப் போலிஸாரைக் குறிப்பிட்டு இந்தத் தவறான அபராதத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

   

இப்பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பெங்களூரு போக்குவரத்துப் போலிஸார் உடனடியாகப் பதிலளித்து, இந்தத் தவறான அபராதத்தைச் சரிசெய்வதற்குரிய மின்னஞ்சல் முகவரி மற்றும் உதவி எண்களை வழங்கித் தொடர்புகொள்ள அறிவுறுத்தியுள்ளனர். “கித்தாருக்கு ஹெல்மெட் எங்கே?” என நெட்டிசன்கள் கிண்டலடித்து வரும் அதே வேளையில், ஏஐ தொழில்நுட்பத்தின் இத்தகைய தொடர் தவறுகளால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.