கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை, கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்தி கொடூரமாகக் கொலை செய்த மனைவியின் அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது. வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த பிரசாந்த் (35) என்பவர் கடந்த ஜூன் 30-ஆம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பிரசாந்தின் தாயார் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிடைத்த தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், பிரசாந்தின் மனைவி சந்தியா (32) என்பவருக்கும், அனில் (35) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
தங்களது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த பிரசாந்தை தீர்த்துக்கட்ட சந்தியாவும், அவரது காதலன் அனிலும் ஒரு கொடூரமான சதித்திட்டத்தைத் தீட்டினர். இதற்காக அவர்கள் வெங்கட சாய் என்பவரின் உதவியை நாடினர். திட்டத்தின்படி, கடந்த ஜூன் 29 அன்று பிரசாந்திற்கு அதிக அளவில் மது அருந்த செய்த சாய், அவரை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, சந்தியா தொலைபேசி மூலம் கொடுத்த அறிவுறுத்தலின்படி கீழே தள்ளிவிட்டார். ஆனால், இந்த விபரீத முயற்சியில் பிரசாந்த் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த சந்தியாவும் சாயும், பின்னர் அவரை வீட்டிற்கே கூட்டி வந்தனர்.
இருப்பினும், பிரசாந்தைக் கொல்லும் வெறி அடங்காத சந்தியா, காதலன் அனிலின் தூண்டுதலின் பேரில் மாற்றுத் திட்டத்தைக் கையாண்டார். மருத்துவ சிகிச்சையில் படுக்கையில் இருந்த கணவருக்கு, குழாய் தம்பனம் (ட்யூப்) வழியாக கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட் திரவத்தையும், மயக்க மருந்தையும் கொடூரமாக உடலில் செலுத்தினார். அத்துடன் அவரை கட்டிலில் இருந்தும் கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்துள்ளார். விசாரணையின் போது தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்ட சந்தியா, காதலன் அனில் மற்றும் கூட்டாளி வெங்கட சாய் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
