வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 10,000 பணம் மற்றும் 4 சவர நகையை குடுகுடுப்பைக்காரன் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவான்மியூர் மேட்டு தெருவில் சதீஷ்குமார் என்ற தனியார் நிறுவன ஊழியர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி மஞ்சு (40) நேற்று முன்தினம் காலை சுமார் 10 மணியளவில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒரு குடுகுடுப்பைக்காரர் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் உங்கள் வீட்டுக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது, உங்கள் குடும்பத்திற்கு செய்வினை வைத்துள்ளனர். உங்களுடைய கணவர் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது என கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் மஞ்சு அதிர்ச்சி அடைந்தார்.
மாந்திரீகம் செய்து செய்வினையை எடுத்து விடுகிறேன், ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மஞ்சு பதிலளித்த நிலையில் ஒரு கயிறை மஞ்சுவின் கையில் கட்டி விட்டு 20 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என அந்த நபர் கேட்டுள்ளார். உடனே மஞ்சு தன்னிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பிறகு அந்த நபர் இது போதாது நகைகள் வேண்டும் என்று கூறி மஞ்சு கையில் அணிந்திருந்த வளையல் மற்றும் காதணிகள் என நான்கு சவர நகைகளை வாங்கியுள்ளார். சுடுகாட்டிலும் உங்கள் தெருமுனையிலும் நின்ற சில மாந்திரீக வேலைகள் செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து நகையை கொடுத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய கணவரிடம் குடுகுடுப்பைக்காரனிடம் நகை மற்றும் பணம் கொடுத்து ஏமாந்ததை அவர் தெரிவித்த நிலையில் உடனே அவர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் வழக்குப்பதிவு செய்து குடுகுடுப்பைக்காரர் பாலமுருகன் (50) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்த பாலமுருகன் சென்னை புறநகர் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அதேபோல கைவரிசை காட்டியவர் என்பது தெரியவந்துள்ளது.
