உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், தனது உறவுக்காரப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து, அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றிய 40 வயது நபர் ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வேலை நிமித்தமாகத் தனியாகத் தங்கியிருந்த 29 வயது இளம்பெண்ணை, அவரது உறவினரான அந்த நபர் கடந்த பிப்ரவரி மாதம் சந்தித்துள்ளார். அந்தச் சமயத்தில் அப்பெண்ணைக் கட்டாயப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், இதனை வெளியே சொன்னால் பெண்ணின் குடும்பத்தினர் மீது பொய்ப் புகார் அளிப்பேன் என்று மிரட்டியும் வந்துள்ளார்.
தொடர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டிப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர், அந்த கொடூரச் செயலை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த நபரைத் தேடி வந்தனர். தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் போலீசார் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
