சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்கு வரன் தேடுவதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது சுயவிவரங்கள் அனைத்தையும் பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த சூர்யா என்ற நபர் இளம் பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்படிப் பேசி பழகும் போது திருமணத்திற்கு பிறகு சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்று இளம் பெண்ணிடம் சூர்யா கூறியுள்ளார். ஏற்கனவே தன்னிடம் சிறிது பணம் இருப்பதாகவும் மேற்கொண்டு பணம் கிடைத்தால் புதிய வீடு வாங்கி திருமணத்திற்கு பிறகு குடியேறி விடலாம் என்றும் அந்த நபர் இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இதனை நம்பிய அந்த இளம் பெண் சுமார் 8 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 9 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்ற பிறகு சூர்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் அந்தப் பெண்ணை அவர் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து உள்ளார். இது குறித்து கேட்டபோது மிரட்டும் பாணியில் சூர்யா பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடிய நிலையில் திருநெல்வேலியில் தலைமுறைவாக இருந்த அவரை மடக்கி பிடித்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் சூர்யா ஒரு கல்யாண ராமன் அவதாரம் எடுத்தது வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது ஆன்லைன் மேட்ரிமோனி மூலமாக வரன் தேடும் பெண்களை குறி வைத்து மோசடி செய்வதுதான் இவருடைய வழக்கமாக இருந்துள்ளது. தன்னை ஒரு அரசு அதிகாரி போல காட்டிக் கொண்டு திருமணத்திற்கு பிறகு வீடு மற்றும் கார் ஆகியவற்றை வாங்க வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி இளம் பெண்களை ஏமாற்றி சூர்யா மோசடி செய்து வந்துள்ளார்.
இந்த பணத்தை வைத்து அவர் ஒரு சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார். இவர் மீது சுமார் 10 பெண்கள் அடித்த புகாரை தொடர்ந்து கைது செய்துள்ள போலீசார் சூர்யாவை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் திருமண வரம் தேடும் பெண்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
