“இன்னும் உயிரோடதான் இருக்கேன்”…. 37 நாட்களுக்குப் பின் மலேசிய தூதரக கதவை தட்டிய மாயமான நபர்….. நேபாள மரண வெள்ளத்தில் நடந்தது என்ன….?

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் சிக்கி மாயமான மலேசிய நாட்டைச் சேர்ந்த சீன வம்சாவளி நபர் ஒருவர், 37 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நேபாளத்தின் ரசுவா பகுதிக்குச் சென்ற இவர், ஆகஸ்ட் 26-இல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டார். வெள்ளத்தின் தீவிரத்தால் சாலைகளும் பாலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன், மின்சாரம், குடிநீர் மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகளும் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் வெளியுலகத் தொடர்பின்றி அப்பகுதியிலேயே அவர் தனித்துவிடப்பட்டார்.

அனைத்து சவால்களையும் மனவுறுதியுடன் எதிர்கொண்ட அவர், 37 நாட்களுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை காத்மாண்டுவிலுள்ள மலேசியத் தூதரகத்தைத் தாமாகவே தொடர்புகொண்டார். இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று அவர் மலேசியாவுக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார். இவரின் மீட்பைத் தொடர்ந்து, நேபாள வெள்ளத்தில் மாயமான மலேசியர்களின் எண்ணிக்கை 55-லிருந்து 54-ஆகக் குறைந்துள்ளது. இத்தனை நாட்களுக்குப் பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டது பெரும் வியப்பையும் அனைவரிடமும் ஆழ்ந்த ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.