இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதிவு செய்வதிலும், அதனைத் திரும்ப ஒப்படைப்பதிலும் புதிய கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தியுள்ளன. கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதியின்படி, நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்யக் குறைந்தபட்சம் 25 நாள்கள் காத்திருக்க வேண்டும். இதே நடைமுறை கிராமப்புற நுகர்வோருக்கு 45 நாள்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இந்த காலக்கெடு முடிவடைந்த பின்னரே அவர்களால் புதிய சிலிண்டரைப் பெற முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் வீடுகளில் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறும் வாடிக்கையாளர்கள், அது செயல்பாட்டிற்கு வந்த 30 நாள்களுக்குள் தங்களின் பழைய எல்பிஜி இணைப்பை கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்; தவறினால் பிஎன்ஜி சேவை துண்டிக்கப்படும் அபாயமுள்ளது. அவ்வாறு உரிய நேரத்தில் சிலிண்டரை ஒப்படைப்பவர்களுக்கு ‘பரிமாற்ற வவுச்சர்’ வழங்கப்படும், இதனைப் பயன்படுத்தி அவர்கள் பிற்காலத்தில் தேவைப்படும்போது மீண்டும் எல்பிஜி இணைப்பை உடனே பெற்றுக் கொள்ளலாம். இந்த ஒப்படைப்புச் செயல்முறையை இணையதளம் மூலம் ஆவணங்களைச் சமர்ப்பித்து எளிதாக மேற்கொள்ளலாம் என்பதோடு, சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டரை திரும்பப் பெற்ற பின் நுகர்வோரின் வைப்புத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
