20 நாளில் ராஜினாமா செய்தது ஏன்?…. கையோடு கொண்டு வந்த சூட்கேஸைக் காட்டி பரந்தாமன் வைத்த பகீர் குற்றச்சாட்டு…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 20, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போதே தீவிரமடைந்துள்ளது. இத்தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததால் இந்த இடைத்தேர்தல் சூழல் உருவானது. இதனை முதன்மைப் பிரச்சாரப் பொருளாக முன்வைத்து, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியின் திமுக வேட்பாளரும் மூத்த வழக்கறிஞருமான பரந்தாமன், தொகுதி மக்களிடம் வாக்கு சேகரிக்கும் போது சூட்கேஸ் ஒன்றை உயர்த்திக் காட்டிப் பிரச்சாரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலை விமர்சித்த அவர், “மதுராந்தகத்தில் இடைத்தேர்தல் வரக்காரணமே இந்த சூட்கேஸ் தான்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

   

தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய பரந்தாமன், “வாக்களித்த விரலில் மை காய்வதற்குள், தொகுதி மக்களைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாமல் 20 நாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணி என்ன? மக்கள் பிரதிநிதி என்ற உயர் பதவியை விட இந்த பணப் பெட்டிதான் பெரிது என நினைத்துச் செயல்பட்டது தொகுதி மக்களுக்குச் செய்யப்பட்ட அப்பட்டமான துரோகம். வாக்காளர்களைக் கேலிக்கூத்தாக்கிய இந்த நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

   

மேலும், இதுபோன்ற நயவஞ்சகச் செயலைத் தானோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகமோ ஒருபோதும் செய்யாது என உறுதியளித்த பரந்தாமன், தொகுதி மக்களுக்குத் தனது வாக்குறுதியையும் வழங்கினார். மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு முழுநேரமும் உண்மையுடன் நின்று பணியாற்றுவதற்கும், அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.