மதுரை மாநகராட்சி முறை கேட்டில் சிறிய மீன்களை பலியிட்டு பெரிய தலைகளை காப்பாற்றுவதற்கு திமுக முயற்சி செய்கிறதா என்ற சந்தேகம் வலுப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக அமைச்சர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கக்கூடிய மதுரை முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் தடாலடியாக கைது செய்யப்படுவதையும் மேயர் கமுக்கமாக ராஜினாமா செய்வதையும் பார்த்தால் சந்தேகம் வருகிறது. ஊழல் குற்றச்சாட்டு, நிர்வாக குளறுபடிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தின் முக்கியமான நகராட்சிகளான கோவை மற்றும் நெல்லை ஆகிய பகுதிகளை சேர்ந்த திமுக மேயர்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது மதுரையும் இணைந்து இருப்பது உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதில் திமுக அரசு எந்த அளவுக்கு தோல்வி அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளை மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கருவிகளாக மாற்றி வைத்திருப்பது தான் திமுக அரசின் நாடு போற்றும் நல்லாட்சியா? மக்களின் எதிர்ப்புகளை சமாளிக்க மேயர்கள் ராஜினாமா மற்றும் பொது மேயர் பொறுப்பேற்பு என திமுக அரசு என்னதான் நாடகம் ஆடினாலும் தமிழக முழுவதும் நிலவும் நிர்வாக சீர்கேடுகள்,ஊழல் வரி வசூலில் நடக்கும் மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
