“மத்திய பிரதேசம் படகு விபத்து… மூழ்கும் முன் படகிற்குள் நடந்தது என்ன?… வெளியான பகீர் வீடியோ.. அலட்சியத்தின் உச்சம்”…!!!

By Muthu Mani on வைகாசி 2, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் உள்ள பார்கி அணையில், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா துறை சார்பில் இயக்கப்பட்ட அந்தப் படகில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 30 பேர் பயணித்துள்ளனர். அப்போது வீசிய பலத்த காற்றினால் படகு நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன பலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. படகின் கொள்ளளவை விட அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டதே விபத்துக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், வானிலை ஆய்வு மையம் புயல் மற்றும் பலத்த காற்று குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தும், அதனைப் பொருட்படுத்தாமல் சுற்றுலாத் துறை படகை இயக்கியுள்ளது. ஆபத்தை உணர்ந்து படகைத் திரும்பக் கொண்டு வருமாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் படகோட்டிகள் அலட்சியப்படுத்தியதாகத் தெரிய வருகிறது.

   

குறிப்பாக, பயணிகளின் பாதுகாப்பு விதிகளில் மிகப்பெரிய குறைபாடுகள் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்ட வீடியோவில், பயணித்தவர்கள் யாரும் உயிர் காக்கும் கவச உடைகளை (Life Jackets) அணியவில்லை என்பது உறுதியாகியுள்ளது. படகில் தண்ணீர் புகுந்து ஆபத்து ஏற்பட்ட பிறகே கவச உடைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

   

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் உத்தர பிரதேசத்தின் மதுராவிலும் இது போன்ற விபத்தில் 15 பேர் பலியான நிலையில், ஒரு மாதத்திற்குள் மீண்டும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க, சுற்றுலாத் தளங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும்.