தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியில், மாலை சுமார் 5 மணியளவில் பைக்குகளில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 6 இளைஞர்கள், தெருவில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாகத் தாக்கினர். இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த கொடூரத் தாக்குதலில் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஆலங்குளம் காவல் துறையினர், இக்குற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த கால திருமண நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
