இதுதாண்டா நட்பு… குண்டடிபட்டு மருத்துவமனையில் கிடந்த எம் ஜி ஆர்- முதல் ஆளாக சென்று சின்னப்ப தேவர் செய்த செயல்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

எம் ஜி ஆர் படத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் லாபத்தை அடைந்தாலும், அவரை வைத்து படமெடுப்பது கஷ்டம் என்பதால் அவரை வைத்து படம் தயாரிக்க அஞ்சுவார்கள். இதையும் தாண்டி ஒரு சிலரே எம் ஜி ஆரோடு தொடர்ந்து பயணித்தார்கள். அதில் எம் ஜி ஆரின் உற்ற தோழரான தயாரிப்பாளர் சாண்டோ எம் சின்னப்ப தேவரும் ஒருவர்.

   

சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆரை வைத்து 16  படங்களை தயாரித்துள்ளார். அதில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுத்து திரையுலகையே  வாயில் விரல் வைக்க வைத்தார். சின்னப்ப தேவர் தயாரிக்கும் படங்களில் மட்டும் எம் ஜி ஆர் தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு நடித்துக் கொடுத்துவிடுவார் என சொல்லப்படுவதும் உண்டு.

அனைத்துப் பொறுப்பையும் சின்னப்ப தேவர் பார்த்துக்கொள்வார். அதனால் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், ‘ஆண்டவனே..!’ என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, ‘முதலாளி…!’ என்றும் என்றும் அன்போடு அழைத்துக் கொள்வார்கள். அவர்களின் இத்தகை நெருங்கிய நட்புக்கு உதாரணமான ஒரு சம்பவத்தைப் பற்றி பார்ப்போம்.

1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் நிச்சயமற்ற தன்மை நிலவியது. அவர் குணமாகி வந்து மீண்டும் நடிப்பாரா அப்படியே நடித்தாலும் பழைய படி அவரால் சிறப்பாக நடிக்க முடியுமா என அனைவருக்கும் ஒரு சந்தேகம் எழுந்தது.

அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. எம் ஜி ஆரை மருத்துவமனையில் சென்று சந்தித்த தேவர், அவர் கைநிறைய பணத்தைக் கொடுத்து “இது நம் படத்துக்கான அட்வான்ஸ். சீக்கிரமே வந்து நடித்துக் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்போது எம் ஜி ஆரையே மிகவும் நெகிழ வைத்துவிட்டதாம். அதன் பிறகு எம் ஜி ஆர் சினிமாவுக்கு வந்து மேலும் 10 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar