எம் ஜி ஆர் தன்னுடைய திரைப்பட வாழக்கையையும், அரசியல் வாழ்க்கையையும் மிகவும் திட்டமிட்டு கொண்டு சென்றார். திரைப்படத்திலும், அதற்கு வெளியிலும் தன்னுடைய இமேஜ் எப்படி இருக்க வேண்டும் என்பதில் எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். குழந்தைகள் மற்றும் தாய்மார்களிடம் அளவில்லாத அன்பை கொடுக்கும் இளைஞராகவும், ஏழை எளியவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வள்ளலாகவும் தன்னைக் கட்டமைத்துக் கொள்வார்.
தீவிர கடவுள் பக்தரான எம் ஜி ஆர் நாத்திகம் மற்றும் பகுத்தறிவு கருத்துகளைப் பேசிய திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்தார். அதனால் தன் படங்களில் சாமி கும்பிடுவது போன்ற காட்சிகளில் அவர் அதிகமாக நடிக்கவில்லை. ஆனால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கோயில்களுக்கு சென்று வழிபட்டுள்ளார். தனக்கு கடவுள் நம்பிக்கை நிச்சயமாக உண்டு எனவும் சில நேர்காணல்களில் கூறியுள்ளார்.
60 களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், சிவக்குமார் போன்றவர்கள் பல்வெறு படங்களில் கடவுள் வேடங்களில் அதிகமாக நடித்து வந்தார்கள். ஆனால் எம் ஜி ஆர் கடவுள் வேடத்தில் இரண்டே படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார். அதுவும் சிறு காட்சிகளில் மட்டுமே.
தனிப்பிறவி படத்தில் எம் ஜி ஆர் முருகன் வேடத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார். ஆனால் கதைப்படி அது ஜெயலலிதா கதாபாத்திரத்தின் கனவுக் காட்சியாக அமைக்கப்பட்டது. அதனால் அந்த படத்தில் அவர் கடவுள் வேடத்தில் நடித்தார் என சொல்லமுடியாது. ஆனாலும் எம் ஜி ஆரை அழகான முருகன் வேடத்தில் பார்த்ததில் அவர் ரசிகர்கள் அகமகிழ்ந்தனர்.
அதே போல மற்றொரு படமான உழைக்கும் கரங்கள் படத்தில் சிவன் வேடத்தில் எம் ஜி ஆர் தோன்றி சிலை கடத்துபவர்களை எதிர்த்து சண்டை போடுவார். இவையிரண்டு தவிர எம் ஜி ஆர் நடிப்பில் யேசுநாதர் என்ற படம் உருவாக இருந்தது. அதற்காக எம் ஜி ஆர் யேசுநாதர் வேடத்தில் கையில் ஆட்டுக்குட்டியோடு இருப்பது போல போட்டோஷூட் எடுத்தார்கள். ஆனால் அந்த படம் உருவாகவே இல்லை.