கர்நாடக மாநிலம் பெங்களூரு காட்டன் பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். அவர் வழக்கம்போல் தனது பசு மாட்டைச் சாலையோரம் கட்டிப் போட்டிருந்தார். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கட்டிப் போட்டிருந்த அந்த பசு மாட்டுடன் மிகவும் கொடூரமான முறையில் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.
இப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராவில் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளன. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வரும் அந்த வாலிபர், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கும் இங்கும் பார்க்கிறார். சாலையில் நடமாட்டம் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின், பசு மாட்டிடம் வக்கிர புத்தியுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டு, மீண்டும் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறார்.
விலங்கினத்திற்கு எதிராக நடந்த இந்த கொடூரச் செயல் குறித்து காட்டன் பேட்டை காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளில் அந்த வாலிபரின் முகம் மற்றும் அவர் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண் ஆகியவை மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளதால், அந்த ஆதாரங்களை உரிமையாளர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அந்த வக்கிர புத்தி கொண்ட வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
