“காதலன் தற்கொலை… தங்கை கொலை”…. 24 மணிநேரத்தில் நடந்த சினிமா பாணி நாடகம்…. வெளிநாட்டு அண்ணனின் ரகசிய ‘விசிட்’ அம்பலம்….!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியைச் சேர்ந்த சசிகலா மற்றும் பாண்டி ஆகியோரின் காதல் விவகாரம், கொலையில் முடிந்துள்ள அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சசிகலா மற்றும் பாண்டி நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில், சசிகலாவின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலாவிற்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தபோதிலும், சசிகலா தனது பழைய காதலன் பாண்டியுடன் தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் சசிகலா தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதால், போலீஸ் தலையீட்டிற்குப் பிறகு அவர் மீண்டும் தனது தந்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலா தனது தந்தை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன் பாண்டி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே காரை நிறுத்திவிட்டு மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு மரணங்களும் தற்கொலைகளாகவே பார்க்கப்பட்ட நிலையில், போலீசாரின் ரகசிய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

   

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சசிகலாவின் அண்ணன் அஜித், தனது தங்கையின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்து, யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் தமிழகம் வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மதுரை விமான நிலையம் வந்திறங்கிய அவர், அன்றே தனது வீட்டிற்குச் சென்று சசிகலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தில் சசிகலாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை போலச் சித்தரித்துத் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். பின்னர் யாருக்கும் தெரியாமல் மீண்டும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.

   

இந்தக் கொலைக்குச் சசிகலாவின் கணவர் முருகன் மற்றும் அஜித்தின் நண்பர்கள் உடந்தையாக இருந்தது போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. சசிகலாவின் மரணத்தைத் தற்கொலை என்று நம்ப வைக்க குடும்பத்தினர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. தற்போது சசிகலாவின் கணவர் முருகன் மற்றும் அவரது நண்பர் தினேஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற அண்ணன் அஜித்தை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்யத் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.