உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில் காதல் விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த சனா என்ற செவிலியர் அவரது காதலர் பைசலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கரும்புத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த சனாவிற்கும், அங்குள்ள ஒரு மசாஜ் மற்றும் ஸ்பாவில் வேலை செய்து வந்த பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த பைசல் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பைசலின் காதலால் ஈர்க்கப்பட்ட சனா, தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது 9 வயது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
விவாகரத்திற்குப் பிறகு பைசலிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சனா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில், பக்ரீத் பண்டிகைக்காகப் பைசல் உ.பி.யில் உள்ள தனது சொந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அவரைத் தேடி மே 29 அன்று சனாவும் மும்பையிலிருந்து பிஜ்னோருக்கு நேரடியாகச் சென்றுள்ளார். அங்கு தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியும், உனது குடும்பத்தினரைச் சந்திக்க வேண்டும் என்றும் சனா கூறியுள்ளார். ஆனால், பைசல் திருமணத்திற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சனா தான் பைசலிடம் கொடுத்திருந்த பணம் மற்றும் நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பைசல், சனாவைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்குக் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் ஏற்பட்ட தகராறில் சனாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த பைசல், அவரது உடலைக் கரும்புத் தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க உடனடியாக மும்பைக்கும் தப்பிச் சென்றுள்ளார். சனா மாயமானது குறித்து அவரது குடும்பத்தினர் மும்பை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சனாவின் மொபைல் இருப்பிடத்தை ஆய்வு செய்தபோது அது பிஜ்னோரைக் காட்டியுள்ளது. இதையடுத்து, மும்பை போலீசார் பைசலைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது உ.பி. போலீசார் கரும்புத் தோட்டத்திலிருந்து சனாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
