ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சாக்குப்பை ஒன்றுக்குள் சடலம் இருப்பதாகக் காவல்துறையினரின் ‘டயல் 100’ உதவி எண்ணிற்கு அழைப்பு வந்துள்ளது. தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாலாபூர் காவல்துறையினர், சாக்குப்பையில் இருந்த உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ரெஹானா என்பது தெரியவந்தது.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், ரெஹானா அதே பகுதியைச் சேர்ந்த அகமது சலாம் (21) என்பவரைக் காதலித்து வந்ததும், அவரை உடனடியாகத் திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த அகமது, ரெஹானாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் கொலையை மறைப்பதற்காக உடலைச் சாக்குப்பையில் அடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தலைமறைவாக உள்ள குற்றவாளி அகமதுவைத் தீவிரமாகத் தேடி வரும் காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
