பெங்களூருவில் உள்ள கூகுளின் ‘அனந்த்’ அலுவலகத்தை அர்பிதா என்ற இளம்பெண் டிஜிட்டல் முறையில் சுற்றிக் காட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஓர் அலுவலகம் இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்குமா என்று வியக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தில், விதவிதமான காபி மற்றும் தேநீர் வகைகள் கிடைக்கும் காபி கார்னர் முதல் ஊழியர்கள் விளையாடி மகிழ மினி கோல்ஃப் மைதானம் வரை சகல வசதிகளும் உள்ளன. “மீட்டிங்குகள் காத்திருக்கலாம், ஆனால் கோல்ஃப் காத்திருக்க முடியாது” என்று அர்பிதா வேடிக்கையாகக் கூறுவது, அங்குள்ள நிதானமான பணிச் சூழலை வெளிப்படுத்துகிறது.
இந்த அலுவலகத்தின் உணவுப் பகுதி எந்த ஒரு சொகுசு ஹோட்டலுக்கும் சவால் விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தெருவோர உணவுகள் தொடங்கி இந்திய, தாய் மற்றும் பான் ஆசிய உணவுகள் வரை நீண்டுகொண்டே செல்லும் மெனுவும், புத்தம் புதிய ரொட்டி வகைகள் மற்றும் இனிப்புகளும் பார்ப்பவர்களைக் கண்கவரச் செய்கின்றன. இவ்வளவு உணவுகள் இருப்பதால் வேலை செய்வதை விட சாப்பிடுவதிலேயே அதிக நேரம் செலவிடத் தோன்றுவதாக அர்பிதா சிரித்துக்கொண்டே குறிப்பிடுகிறார். சாப்பிட்டு முடித்த பின் ஊழியர்கள் ஓய்வெடுக்கவும், சோர்வைப் போக்கவும் உயர் தொழில்நுட்ப மசாஜ் நாற்காலிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் “இது அலுவலகமா அல்லது 7-நட்சத்திர ரிசார்ட்டா?” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். “இதுபோன்ற வசதிகள் கிடைத்தால் நான் அலுவலகத்தை விட்டு வெளியேறவே மாட்டேன்” என்றும், “ஏன் மக்கள் கூகுளில் சேரத் துடிக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது” என்றும் பயனர்கள் வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர். “நான் வீட்டை விட்டு வெளியேறி இங்கேயே வாழலாம்” என அர்பிதா பதிவிட்டிருப்பது, பல ஊழியர்களின் கனவு அலுவலகமாக ‘அனந்த்’ திகழ்வதை உறுதிப்படுத்துகிறது.
View this post on Instagram
