சாம்பார் சாதத்தில் மிதந்த அதிர்ச்சி…. அரசுப் பள்ளி உணவை சாப்பிட்டு சுருண்டு விழுந்த 11 குழந்தைகள்…. பதறிய பெற்றோர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 24, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேலக்கண்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 24 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், இன்று காலை வழக்கம்போல மாணவர்களுக்கு சாம்பார் சாதம் மற்றும் உப்புமா வழங்கப்பட்டது. உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதே அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையே, அந்த உணவை உட்கொண்ட மாணவர்களில் சிலருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கம் உண்டானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பள்ளி ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட 9 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 11 பேரை உடனடியாக மீட்டு, அருகில் உள்ள பாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து வருவதுடன், அவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

   

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி எவ்வாறு விழுந்தது, உணவு சமைக்கப்பட்ட சூழலில் சுகாதாரம் பேணப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.