கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், லோகநாதன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, சட்டபூர்வமாக விவாகரத்து பெறாமல் லோகநாதன் வேறொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். சென்னை ஈசிஆர் சாலை கொட்டிவாக்கம் பகுதியில் தனது தாயார் மற்றும் இரண்டாவது மனைவியுடன் அவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தனது கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து அறிந்த கனகா, பலமுறை அவரிடம் நியாயம் கேட்டும் முறையான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான அவர், வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்து வந்துள்ளார். தனது 4½ வயது குழந்தையுடன் கணவர் வசிக்கும் சென்னை கொட்டிவாக்கம் வீட்டிற்குச் சென்ற கனகா, அங்கு லோகநாதன் தனது இரண்டாவது மனைவியுடன் ஒன்றாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, சமயோசிதமாக செயல்பட்ட கனகா வீட்டை வெளிப்புறமாக பூட்டி, கணவனையும் அவரது இரண்டாவது மனைவியையும் உள்ளேயே சிறைவைத்தார். பின்னர் இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார், “ஏற்கனவே எங்கு புகார் அளித்தீர்களோ அங்கிருந்தே போலீசாரை அழைத்து வர வேண்டும்” எனக் கூறி அலட்சியமாக பேசியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த கனகா, தனது குழந்தையுடன் கணவர் வீட்டு வாசலிலேயே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசாரின் இந்த அலட்சியப் போக்கு அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தொடர் போராட்டத்தை அடுத்து, நீலாங்கரை போலீசார் லோகநாதன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பே இந்த இரண்டாவது திருமணம் குறித்து அடையார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், லோகநாதன் இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும், அவரும் தனது முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே லோகநாதனுடன் குடும்பம் நடத்தி வந்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
