தமிழக சட்டப்பேரவையில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்தான விவாதம் பெரும் காரசாரமான விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது. பேரவைக் கூட்டத்தின் போது, திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி எழுந்து, “எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்ததாகக் கூறும் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் தைரியமாகக் காட்டுங்கள்” என சவால் விடுத்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஆதாரங்களை முன்வைக்கும் போதெல்லாம் அதை ஏற்க மறுப்பது திமுகவின் வழக்கமாகிவிட்டதாகவும், முதலமைச்சரிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட்டால் எதிர்கட்சியினரின் நிலைமை மிகவும் பரிதாபமாகிவிடும் என்றும் எச்சரித்தார்.
இந்த காரசாரமான விவாதத்தின் இடையே குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், பேரவையில் இருந்த அனைவரையும் உரையாயச் செய்தார். “கடந்த வாரம் நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசும்போது, திமுகவின் 3 முக்கிய துறைகளின் ஊழல் அறிக்கைகள் எனது மேஜையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அவர் அதை ஏனோதானோவென்று போகிற போக்கில் சொல்லவில்லை; உண்மையிலேயே அந்த முக்கியமான கோப்புகள் என் மேஜையில் தயார் நிலையில் உள்ளன. அதை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள்! எதை, எந்த நேரத்தில், எவ்வாறு மக்கள் மன்றத்திலும் பேரவையிலும் ஓபன் செய்ய வேண்டுமோ, அப்போது நிச்சயம் நாங்கள் அதைச் செய்வோம்” என நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார்.
முதலமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சைத் தொடர்ந்து அவையில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “எதிர்க்கட்சியினர் ‘பேசுங்கள் பேசுங்கள்’ எனக் கூறுகிறார்கள். ஆனால், முதலமைச்சர் தனது ஆதாரங்களை ஒவ்வொன்றாகக் காட்டிப் பேசத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்தால் அவர்கள் நிச்சயம் அமைதியாகி விடுவார்கள்” எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து தனது உரையைத் தொடர்ந்த விஜய், “மக்களிடம் எப்போது, எப்படி, என்ன பேச வேண்டும் என்பதை உணர்ந்துதான் மக்கள் எங்களை அன்போடு இங்கு உட்கார வைத்திருக்கிறார்கள். இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதால் தான் அமைதி காக்கிறேன்” எனப் புன்னகையுடன் தெரிவித்தார்.
