தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சௌபல்யா தன்ராஜ் (20) மற்றும் கௌதீன் சென்ஹீ (23) ஆகிய இரு இளைஞர்கள், திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்காக புரூஸ்லியா – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழகம் வந்துள்ளனர்.
காட்பாடி – விழுப்புரம் ரயில்வே மார்க்கத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது, ஆபத்தை உணராமல் இருவரும் ரயிலின் வாசற்படியில் அமர்ந்து கால்களை வெளியே தொங்கவிட்டபடி பயணம் செய்துள்ளனர். ரயில் கண்ணமங்கலம் ரயில்வே பிளாட்பாரத்தை நெருங்கியபோது, எதிர்பாராதவிதமாக இருவரின் கால்களும் பிளாட்பாரத்தின் மீது பலமாக மோதித் தூக்கி வீசப்பட்டன. இதில் இருவரின் கால்களும் துண்டாகி, தண்டவாளத்தில் விழுந்த நிலையில் இருவரும் வலியால் கதறித் துடித்தனர்.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்த இரு இளைஞர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ரயிலின் படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
