நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’, தொடக்கம் முதலே பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது. கடந்த பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டிய இப்படம், சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் மறு தணிக்கை போன்ற காரணங்களால் தள்ளிப்போனது. இடையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வெளியீடு மேலும் சிக்கலான சூழலில், நேற்று படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. அதனைத் தொடர்ந்து இன்று முழு படமும் சட்டவிரோத இணையதளங்களில் வெளியாகி படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இப்படத்தைத் தயாரித்துள்ள கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான இத்திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாகப் படம் கசிந்திருப்பது தயாரிப்பு தரப்பிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (X) மற்றும் டோரண்ட் போன்ற எந்தவொரு தளத்தின் வழியாகவும் இப்படத்தின் காட்சிகளையோ அல்லது முழு படத்தையோ பதிவிறக்கம் செய்வது, பகிர்வது அல்லது சேமிப்பது என்பது கடுமையான பதிப்புரிமை மீறல் மற்றும் குற்றச்செயலாகும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஒவ்வொரு நபரும் தனித்தனியாகக் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது மிக கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் பாயும் என்றும் சட்ட ஆலோசகர் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏற்கனவே முதற்கட்டமாகப் படத்தைப் பரப்பிய நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் இந்த சட்டவிரோதப் பரப்பலுக்குத் துணையாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மீறிச் செயல்படுபவர்கள் அதன் விளைவுகளுக்குத் தாங்களே பொறுப்பேற்க நேரிடும் என்றும், உரிமையியல் மற்றும் குற்றவியல் ரீதியான தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அந்த எச்சரிக்கை அறிக்கையில் காரசாரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான இந்த டிஜிட்டல் தாக்குதல் தற்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
