அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அக்கட்சியின் முன்னணி தலைவர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் அணிகள் மீண்டும் இணைந்துள்ளன. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதன் உச்சகட்டமாக, அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தலைமைச் செயலகத்திலேயே தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பல மூத்த நிர்வாகிகள் தவெகவை நோக்கி நகர்ந்ததால் அதிமுகவில் குழப்பம் நீடித்தது.
இந்த ஒட்டுமொத்த அரசியல் நெருக்கடிக்கும், சமீபத்தில் அதிமுகவில் இணைந்த லாட்டரி அதிபரின் மனைவியான லீமா ரோஸ் மார்ட்டின் தான் காரணம் என்று கட்சிக்குள்ளும் வெளியேயும் கடுமையான புகார்களும் வதந்திகளும் பரவின. லால்குடி தொகுதி எம்எல்ஏவும், அதிமுக மாநில மகளிரணி இணைச் செயலாளருமான லீமா ரோஸின் செயல்பாடுகளால்தான் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து கட்சியை விட்டு விலகுவதாக சமூக ஊடகங்களிலும் செய்திகளிலும் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி – வேலுமணி அணிகளின் இணைப்பைத் தொடர்ந்து, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு லீமா ரோஸ் மார்ட்டின் அறிக்கை ஒன்றின் மூலம் மிகக் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். தன்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர்களை “வாடகை பேச்சாளர்கள்” என்று சாடியுள்ள அவர், எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அவர்கள் பரப்பிய கட்டுக்கதைகளும் வதந்திகளும், தலைவர்களின் இந்த அதிரடி இணைப்பின் மூலம் தற்போது முற்றிலும் பொய்த்துப் போய்விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் செழுமைப்படுத்தப்பட்ட இந்த பேரியக்கத்தில் பிரிவினையை ஏற்படுத்த தான் ஒருபோதும் எண்ணியதில்லை என்று லீமா ரோஸ் திட்டவட்டமாக விளக்கியுள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை தன் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாகக் கருதுவதாகவும், இனி தொகுதி மக்களின் நலனுக்காகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சியை மலரச் செய்யவும் அயராது பாடுபடப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இவரின் இந்த அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
