பஞ்சாபின் பதிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில், அறிவியல் ஆசிரியை ஒருவர் தனது சக ஊழியரான மூத்த கணித ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கடந்த 2023 ஜூன் மாதம் பணியில் சேர்ந்த அந்த ஆசிரியை, பள்ளியின் அறிவியல் ஆய்வகப் பழுதுபார்ப்புப் பணிகளைக் கண்காணிக்கும் குழுவில் உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில், பழுதடைந்த அலமாரிகளைக் காட்டுமாறு கூறி ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்ற சக ஆசிரியர், அங்கு வைத்து ஆசிரியைக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆய்வகத்தில் வைத்து அந்த ஆசிரியைக்கு ‘விருந்து’ தரவில்லை எனக் கூறி தகாத கருத்துக்களைத் தெரிவித்ததோடு, திடீரென அவரது கழுத்தைப் பிடித்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டுத் தாகுதலில் ஈடுபட்டுள்ளார். தப்ப முயன்ற ஆசிரியையின் வாயை மூடி மிரட்டியதோடு, “என் ஆட்டம் முடிந்தது” என்று கூறி அநாகரீகமாக நடந்து கொண்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இருப்பினும், துணிச்சலுடன் செயல்பட்ட அந்த ஆசிரியை, அங்கிருந்து தப்பித்து சக பெண் ஊழியர்களிடமும் தனது குடும்பத்தினரிடமும் விபரங்களைக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினருடன் காவல் நிலையத்திற்குச் சென்று அவர் முறைப்படி புகார் அளித்தார். ஆசிரியையின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பதிந்தா காவல்துறையினர் தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
