எம்.எல்.ஏ கைது… “போலீஸ் இதை உடனே நிறுத்தணும், இல்லனா…” டேக் டைவர்ஷன் மாடல் அரசுக்கு கோர்ட் குடுத்த குட்டு மறந்து போச்சா?… த.வெ.க அரசுக்கு ஸ்டாலின் விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!

By Visaka on ஆடி 20, 2026

Spread the love

விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக பண்புகள் எதுவுமின்றி த.வெ.க. அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தங்களது ஆட்சியில் நடக்கும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இணைய ஆதரவாளர்களை இந்த ‘டேக் டைவர்ஷன் மாடல்’ அரசு தொடர்ந்து வேட்டையாடி வருவதாகச் சாடியுள்ளார். அவதூறு வழக்குகளில் கூட தேவையில்லாத குற்றப்பிரிவுகளை ஏன் சேர்க்கிறீர்கள் என்று சமீபத்தில்தான் நீதிமன்றத்திடம் த.வெ.க. அரசு குட்டு வாங்கியது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது சாத்தானின் ஆட்சியா என்ற காரசாரமான கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனுக்கு அடிப்படை சட்ட உரிமைகளும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தனது பதிவில் வேதனை தெரிவித்துள்ளார். அவர் தனது வழக்கறிஞரையோ அல்லது ஆதரவாளர்களையோ சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகார் மீதும், மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு, அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆட்சியாளர்களின் சட்டத்திற்குப் புறம்பான உத்தரவுகளை நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையின் பணி அல்ல என்றும், சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படாவிட்டால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் காவல்துறையினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.