தமிழ் சினிமாவில் கேப்டன் என அழைக்கப்பட்டவர் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். தென்னிந்திய சினிமா சங்க தலைவராகவும் இவர் பணியாற்றியவர். தமிழ் சினிமாவில் பல புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர். பல நடிகர்களை சினிமாவுக்குள் கொண்டு வந்தவர்.
குறிப்பாக நடிகர்கள் வடிவேலு, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், தியாகு என பலரும் விஜயகாந்தால் உருவாக்கப்பட்டவர்கள்தான். கடந்த மாதம் 28ம் தேதி அவர் உடல்நலக்குறைவால் காலமானார். விஜயகாந்த் மறைவுக்கு அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்து விட்டு வந்த நடிகர் ராகவா லாரன்ஸ், தனியாக ஒரு வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில், கேப்டன் விஜயகாந்த் எத்தனையோ பேரை சினிமாவில் வளர்த்து விட்டவர். எத்தனையோ தர்மகாரியங்களை செய்தவர். பல ஆயிரக்கணக்கான மக்களின் பசியை தீர்த்தவர். அவரது மறைவுக்கு செய்யும் அஞ்சலியாக, மரியாதையாக அவர் பையன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படத்தில், கேமியோ ரோல் செய்ய விரும்புகிறேன். அல்லது இரட்டை ஹீரோ கேரக்டர்கள் என்றாலும் அந்த தம்பியுடன் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என அறிவித்திருந்தார்.
வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் யு அன்பு இயக்கத்தில், படைத்தலைவன் என்ற படத்தில், சண்முக பாண்டியன் கதாநாயகனாக இப்போது நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். இதில் கஸ்தூரி ராஜா, எம்எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கேமியோ ரோலில் நடிப்பதற்காக, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அவருக்கு படக்குழுவில் இருந்து அழைப்பு வந்தது. நிறைய நாட்கள் கால்ஷீட் தர ராகவா லாரன்ஸ் முன்வந்த நிலையில், 3 நாட்கள் மட்டும் போதும் என்று படக்குழு கூறிய நிலையில், சொன்ன சொல்லை நிறைவேற்றி விட்டார் ராகவா லாரன்ஸ். படைத்தலைவன் படத்தில், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுடன் கேமியோ ரோலில் நடிக்கிறார்.