திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக சமூக ஊடகங்களில் உலா வந்த செய்தி வந்துகொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அவர் களம் இறங்கலாம் எனப் பரவிய வதந்திகள் குறித்துப் பதிலளிக்க, முன்னதாக ஜூன் 11-ஆம் தேதியை அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும், இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு காரணமாகத் தனது முக்கிய அறிவிப்பை ஜூன் 12-ஆம் தேதி காலை 10 மணி அளவுக்கு ஒத்திவைப்பதாக லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை 10 மணியளவில் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் இந்தத் தேர்தல் வதந்திகளுக்கு அவர் தெளிவான விளக்கத்தை அளிக்க உள்ளார். தான் தற்போது ‘பென்ஸ்’ (Benz) திரைப்படப் படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதாகவும், தாயாரின் ஆசியுடன் தனது வாழ்க்கையின் அடுத்தகட்ட முக்கிய முடிவை முறைப்படி அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
