உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் சட்டம் ஒழுங்கை முற்றிலுமாக சீர்குலைக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான வன்முறைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேம்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வாசலில் இந்த பயங்கரமான தாக்குதல் நடந்துள்ளது. வாலிபர் ஒருவர் தனது தம்பியை பள்ளியிலிருந்து அழைத்துச் செல்வதற்காக காரில் வந்துள்ளார். அப்போது, பள்ளியின் நுழைவாயில் அருகே அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் இருசக்கர வாகனம், எதிர்பாராதவிதமாக காரின் மீது லேசாக மோதியுள்ளது. இந்த சிறிய காரணத்திற்காக அந்த நபர் காரில் இருந்தவர்களிடம் வண்டுகெட்ட வார்த்தைகளால் வசைபாடத் தொடங்கியுள்ளார்.
https://twitter.com/NewsLeaderLive/status/2075895357733843348/photo/1
இந்த வாக்குவாதம் இத்துடன் முடிவடையாமல், அந்த ரவுடி உடனடியாக தனது நண்பர்கள் 8 முதல் 10 பேரை போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு திரண்ட அந்த கும்பல், பள்ளி மாணவன் என்றும் பாராமல் அவனையும் அவனது சகோதரனையும் லத்தி மற்றும் தடிகளால் கொடூரமாக, உயிர் போகும் அளவிற்கு தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் நிலையை விவரிக்க முடியாத அளவிற்கு வீடியோ காட்சிகள் மிகக் கொடூரமாக உள்ளன. பட்டப்பகலில், ஒரு பள்ளியின் வாசலிலேயே தாதாக்கள் மற்றும் சமூக விரோதிகள் இத்தகைய கொடூரமான தாக்குதலை நடத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், ஜான்சியின் சட்டம் ஒழுங்கு மீதான கடுமையான விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.
