பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த பிணை நிபந்தனைகளைச் சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு திமுக எம்.பி கனிமொழி குறித்தும், தந்தை பெரியார் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறாகக் கருத்து பதிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்குகளில், எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்திருந்தது.
இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரது தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஒவ்வொரு மாதமும் முதல் வேலைநாளில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. தற்போது உடல்நலக் குறைவு காரணமாக எச்.ராஜா சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எச்.ராஜாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நிபந்தனையைத் தளர்த்தினார். அதன்படி, எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
