தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் ரேஷன் கார்டு உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே அரசு சார்பில் வழங்கக்கூடிய நிதி உதவிகளும் சென்றடைகின்றன. அதனால் ரேஷன் கார்டில் KYC அப்டேட்டை முடித்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் வருகின்ற டிசம்பர் 31 அதாவது நாளைக்குள் தங்கள் இ கேஒய்சி சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கிறது.
இதனை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடிக்காவிட்டால் ஜனவரி 1ஆம் தேதி முதல் உங்களுடைய ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்படலாம். இதனால் பொங்கல் பரிசும் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ள நிலையில் ரேஷன் கார்டில் இ கேஒய்சி அப்டேட்டை முடிக்காதவர்களுக்கு பொங்கல் பொருள் கிடைக்காது என தெரிகிறது. எனவே ரேஷன் கடைக்கு நேராகச் சென்று கேஒய்சி சரிபார்ப்பை முடித்து விடுவது நல்லது.
