ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு விடுத்துள்ள ஒரு மறைமுகமான செய்தி இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) தொடருக்கான ஏலத்தில், காவ்யா மாறன் தலைமையிலான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்திய உரிமையாளர்களைக் கொண்ட ஒரு அணி பாகிஸ்தான் வீரரை வாங்கியது இந்திய ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள லலித் மோடி, “ரசிகர்கள் ஏற்கனவே அதிருப்தியில் இருக்கும் வேளையில், ஒரு பாகிஸ்தான் வீரரின் மீது 2.34 கோடி ரூபாய் முதலீடு செய்வதா? ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவது மற்றும் மக்களின் பார்வையை (Optics) எவ்வாறு கையாள்வது என்பது குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். என்னை அழையுங்கள் (Call Me)” என்று காவ்யா மாறனுக்கு அறிவுரை கூறும் வகையில் குறிப்பிட்டுள்ளார். லலித் மோடியின் இந்த அதிரடிப் பதிவு ஏற்கனவே நிலவி வரும் சர்ச்சையை மேலும் சூடாக்கியுள்ளது.
2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. வெளிநாட்டு லீக் தொடர்களிலும் இந்திய உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்கும் சூழலில், காவ்யா மாறனின் இந்த அதிரடி முடிவு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. மூத்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், லலித் மோடியின் இந்த “கால் மீ” (Call Me) பதிவு தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
