இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மறைந்த தன் கணவர் மீதான அதீத பாசத்தினால் அவரது அஸ்தியைச் சாப்பிட்டு வரும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. 2011-ம் ஆண்டு ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவரது கணவர் உயிரிழந்த நிலையில், அவரது அஸ்தி ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஒருமுறை எதிர்பாராத விதமாக அந்த அஸ்தி அப்பெண்ணின் கையில் ஒட்டியபோது, அதைத் துடைக்க மனமில்லாமல் அவர் சுவைத்துப் பார்த்துள்ளார்.
அந்த அஸ்தியைச் சுவைக்கும்போது தனது கணவர் தன்னுடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது ஒரு பழக்கமாகவே மாறிப்போனது. ஒரு நாளைக்கு ஐந்து முறைக்கும் மேலாக அவர் அஸ்தியைச் சாப்பிடத் தொடங்கியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இவ்வாறு செய்து வரும் அவர், இதுவரை சுமார் 5 பவுண்ட் எடை கொண்ட தனது கணவரின் அஸ்தியைச் சாப்பிட்டு முடித்துள்ளதாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கணவரின் நினைவாகத் தொடங்கிய இந்தப் பழக்கம், தற்போது அந்தப் பெண்ணுக்கு ஒரு தீவிர அடிமைத்தனமாக மாறியுள்ளது. அஸ்தியின் சுவைக்கு அவர் அடிமையாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விசித்திரமான பழக்கம் அவரது உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தற்போது அவருக்குத் தேவையான மருத்துவ மற்றும் மனநலச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பாசத்தின் எல்லை மீறிய வெளிப்பாடாகப் பார்க்கப்படும் இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
