“என் காலையே வாரிட்டாங்க” EPS-ஆல் ஓரம் கட்டப்பட்ட தனபாலை சந்தித்து… காலில் விழுந்து கதையை மாற்றிய எல்.முருகன்… கடும் அதிர்ச்சியில் எடப்பாடி..!!

By Soundarya on சித்திரை 6, 2026

Spread the love

கடந்த அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபால், 2026 சட்டமன்றத் தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாய்ப்பு வழங்காமல், அந்தத் தொகுதியைக் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கினார். அங்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நிலையில், கட்சிக்காகப் பல நெருக்கடியான காலங்களில் உறுதுணையாக இருந்த தன்னை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டதாக தனபால் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். தனது உடல்நலக்குறைவின் போது கூட அதிமுக நிர்வாகிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில், அவரது மகன் லோகேஷ் தனபால் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தவெக சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட தனபாலின் மகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளராகக் களம் காணும் எல்.முருகன், சேலத்தில் உள்ள தனபாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தனபாலின் காலில் விழுந்து ஆசி பெற்ற எல்.முருகன், அவருக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும், வரவிருக்கும் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பின் போதும், அதிமுக தலைமை தன்னை முழுமையாக ஒதுக்கிவிட்டதாகத் தனபால் தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிகிறது.

   

சொந்தக் கட்சியான அதிமுகவின் நிர்வாகிகள் யாரும் தன்னை வந்து சந்திக்காத நிலையில், கூட்டணி கட்சியான பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் வந்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியால் புறக்கணிக்கப்பட்ட மூத்த தலைவரை பாஜக வளைக்கப் பார்க்கிறதா அல்லது அவிநாசி தொகுதியில் தலித் சமூக வாக்குகளைக் கவர இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டதா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. அதிமுக கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் கூட்டணி வேட்பாளரின் இந்த அதிரடி நகர்வு தேர்தல் களத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.