காதலும் கடந்து போகும், காலா ,விக்ரம் வேதா போன்ற பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். அதன் பின்னர் அவர் ஜெய் பீம் படத்தில் நடித்த ராஜாக்கண்ணு கதாபாத்திரம் அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்று அவரை ஒரு நடிகராக அங்கீகரிக்க வைத்தது. மணிகண்டன் நடிகராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் . இவர் இயக்கிய “நரை எழுதும் சுய சரிதம்” என்ற திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது. அதன்பின்னர் அவர் கதாநாயகனாக நடித்த ‘குட்னைட்’ படம் பெரிய வெற்றியைப் பெற்று அவரைக் கதாநாயகன் ஆக்கியது.

அதன் பின்னர் அவர் நடித்த லவ்வர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது.தற்போது மணிகண்டன் தமிழ் சினிமாவில் முக்கியமான ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார். இப்படியான நிலையில் நடிகர் மணிகண்டனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் 20 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி வந்த மணிகண்டனின் தற்போதைய சம்பளம் 2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தரமற்ற திரைப்படங்களை கொடுத்து வரும் இளம் ஹீரோக்கள் பல கோடிகள் சம்பளம் வாங்கி வரும் போது தரமான படங்களை கொடுக்கும் மணிகண்டனுக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் தாராளமாக கொடுக்கலாமே என்று தயாரிப்பாளர்களும் கருதுவதாக கூறப்படுகிறது.
