“ஆடையை அவிழ்த்தா காட்ட முடியும்?”…. இலவச பேருந்தில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on புரட்டாதி 28, 2026

Spread the love

கேரள மாநிலத்தில் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்யும் வகையில் ‘பிரியதர்ஷினி’ இலவச பயணத் திட்டம் கடந்த ஜூன் 15 அன்று தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், எர்ணாகுளம் மாவட்டம் பரவூரில் கே.எஸ்.ஆர்.டி.சி சார்பில் இயக்கப்படும் குருவாயூர்-எர்ணாகுளம் வழித்தட பேருந்தில் 12-ஆம் வகுப்பு பயிலும் 5 மாணவிகள் ஏறியுள்ளனர். அதில் 4 மாணவிகளுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கிய நடத்துநர், ஒரு மாணவிக்கு மட்டும் பயணச்சீட்டு தர மறுத்து கட்டணம் கேட்கத் தொடங்கியுள்ளார்.

அந்த மாணவி சமீபத்தில் ஒரு ஆன்மீக யாத்திரையின் போது தனது தலைமுடியைக் காணிக்கையாகச் செலுத்தியிருந்தார். இதனால் அவரது தோற்றத்தை வைத்து, அவர் ஆண் என்று தவறாகக் கருதிய நடத்துநர் டிக்கெட் எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். தான் ஒரு பெண் என்றும், உடன் வந்த தோழிகளும் அவர் பெண் தான் என்றும் தெளிவுபடுத்திய போதிலும், நடத்துநர் அதை ஏற்க மறுத்து மற்ற பயணிகளின் முன்னிலையில் அந்த மாணவியை ஏளனம் செய்துள்ளார். மேலும், “உன்னைப் பார்த்தால் பெண் போல இல்லை, ஆடையையா அவிழ்த்துக் காட்ட முடியும்?” என வரம்பு மீறி அநாகரிகமாகப் பேசியதுடன், அவரைப் பேருந்தை விட்டு இறக்கிவிடவும் முயன்றுள்ளார்.

   

நடத்துநரின் இந்த அநாகரிகமான பேச்சுக்கும் நடவடிக்கைக்கும் பேருந்தில் இருந்த சிலர் ஆதரவு தெரிவித்ததால், அந்த மாணவி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்த விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் இச்சம்பவத்தில் உடனடியாகத் தலையிட்டு, காவல்துறை விசாரணைக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் உத்தரவிட்டார்.

   

இதனைத் தொடர்ந்து, அந்த நடத்துநர் உடனடியாகப் பணிநீக்கம் (Suspension) செய்யப்பட்டு, அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கே.எஸ்.ஆர்.டி.சி தலைவர் பிரமோஜ் சங்கர், “பயணிகளின் உரிமைகளிலும் பாதுகாப்பிலும் எவ்வித சமரசமும் செய்யப்பட மாட்டாது. இனிவரும் காலங்களில் பயணிகளிடமிருந்து பெறப்படும் இதுபோன்ற புகார்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.