தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இணைய எந்தக் கட்சியும் முன்வராத நிலையில், தற்போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற NDA கூட்டத்தில் ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் போன்றோர் பங்கேற்ற நிலையில், கிருஷ்ணசாமி கலந்துகொள்ளாமல் தவிர்த்தது அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டாரோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட தவெக நிர்வாகிகள், அவருடன் நடத்திய ரகசியப் பேச்சுவார்த்தையில் கிருஷ்ணசாமி தனது கட்சிக்கு 10 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
“ஆட்சியில் பங்கு” என்ற விஜய்யின் அதிரடி அறிவிப்புக்கு இதுவரை பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில், புதிய தமிழகம் போன்ற ஒரு சமூக வாக்கு வங்கி கொண்ட கட்சி உள்ளே வருவது தவெக தொண்டர்களுக்குச் சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இருப்பினும், தவெக தரப்பு அவர் கேட்ட 10 தொகுதிகளை ஒதுக்கச் சம்மதித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. சிபிஐ விசாரணை, ‘ஜனநாயகன்’ படப் ரிலீஸ் சிக்கல் எனப் பலமுனை அழுத்தங்களில் இருக்கும் விஜய், தனது பலத்தை நிரூபிக்க இந்தக் கூட்டணியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
