நடுக்காட்டில் மயங்கிய பெண்… மொபைலில் அனுப்பிய அந்த ஒரு ‘மெசேஜ்’… காட்டுக்கு வரவழைத்து கொடூர பிளான் போட்டு தூக்கிய போலீசார்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 27, 2026

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மங்கள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5 லட்சம் கடன் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாகியும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காததால், 4 மாதங்களுக்கு முன்பு அவரை நேரில் வரவழைத்து, மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வட்டியும், ஒரு வருடத்திற்குள் அசல் தொகையையும் செலுத்த வேண்டும் என பத்திரம் எழுதி வாங்கியுள்ளார். இந்த நிலையில், நிலுவையில் உள்ள வட்டிப் பணத்தைக் கேட்பதற்காக அந்தப் பெண் வெங்கடேஷைத் தொடர்பு கொண்டபோது, பணத்தைத் தருவதாகக் கூறி அவரை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வெங்கடேஷுடன் அவரது உறவினரான இளங்கோவும் இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு, அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த கூல்டிரிங்ஸில் மதுபானத்தைக் கலந்து கொடுத்துள்ளனர். அதை அறியாமல் குடித்த அப்பெண்ணிற்குச் சிறிது நேரத்தில் மயக்கம் வரத் தொடங்கியுள்ளது. மயக்கமடைந்த பிறகு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுக்க இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில், மயக்கம் முற்றுவதற்கு முன்பாகவே நிலைமையை உணர்ந்து அந்தப் பெண் சுதாரித்துக் கொண்டார்.

   

நடுக்காட்டில் ஆபத்தான சூழலில் மாட்டிக் கொண்டதை உணர்ந்த அப்பெண், அங்கிருந்து உடனடியாகத் தப்பிக்க வழி தெரியாமல் தன் செல்போனைப் பயன்படுத்தியுள்ளார். வாட்ஸ்அப்பில் “Help Me” என மெசேஜ் டைப் செய்து, தான் இருக்கும் இடத்தின் நேரலை லொகேஷனை (Live Location) பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். இந்தச் செய்தியைக் கண்டு பதறிய பெற்றோர் உடனடியாகப் காவல் நிலையத்தை அணுகிப் புகாரளித்தனர்.

   

தகவல் அறிந்ததும் அதிரடியில் இறங்கிய தனிப்படை போலீசார், வாட்ஸ்அப் லைவ் லொகேஷனைப் பின்பற்றி தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபத்தான நேரத்திலும் சமயோசிதமாகச் செயல்பட்டு லொகேஷன் அனுப்பிய பெண்ணின் விவேகமும், துரிதமாகச் செயல்பட்டு அசம்பாவிதத்தைத் தடுத்த போலீசாரின் நடவடிக்கையும் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.