நகைச்சுவை நடிகர்களுக்கு மிகவும் முக்கியமான இரண்டு விஷயங்கள் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு ஆகியவைதான். இந்த இரண்டிலும் உச்சம் தொட்டவர் வடிவேலு. அதனால்தான் 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்தார். ஆனால் 2011 ஆம் ஆண்டு அவர் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு பெரிய இடைவெளி விழுந்தது.
ஆனாலும் அவரின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் சோஷியல் மீடியா மூலமாக மீம்களாக வைரல் ஆகிவருகின்றன. சமீபத்தில் அவர் நகைச்சுவையே செய்யாமல் நடித்திருந்த மாமன்னன் திரைப்படத்தில் கூட அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது. இப்போது புகழின் உச்சத்தில் இருக்கும் வடிவேலு ஆரம்பகாலத்தில் சினிமாவுக்குள் வந்த போது ஏராளமான பிரச்சனைகளையும் அவமானங்களையும் சந்தித்துள்ளார்.
தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன. ஆனால் வீ சேகர் அவரை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்த போது கவுண்டமணி, செந்தில் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் வடிவேலுவின் திறமையைக் கணித்த வீ சேகர் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்துள்ளார். அதே போல தன்னுடைய படங்களில் வடிவேலுவுக்கு கோவை சரளாவை ஜோடியாக நடிக்க வைத்தார். ஆனால் முதலில் வடிவேலு கோவை சரளாவோடு நடிக்க சம்மதிக்கவில்லையாம். இயக்குனரிடம் “நான் கமலோடு எல்லாம் ஜோடியாக நடிச்சுட்டேன்.. என்ன போய் இவரோட நடிக்க சொல்றீங்களே” எனக் கேட்டுள்ளார்.
அவரிடம் வீ சேகர் “வடிவேலுவை அப்படி நினைக்காத… அவனுக்கு நல்ல திறமை இருக்கு. அவன் கண்டிப்பா ஒரு ரவுண்ட் வருவான். அவனோடு ட்ராவல் பண்ணு” எனக் கூறி சம்மதிக்க வைத்துள்ளார். அதை ஏற்று நடித்த கோவை சரளா ஒரு கட்டத்தில் வடிவேலுவோடு தொடர்ந்து படங்களில் நடித்துள்ளார். வீ சேகர் சொன்னது போலவே வடிவேலு கோவை சரளா காம்பினேஷன் ஒரு பேர் சொல்லும் கூட்டணியாக இன்றளவும் பேசப்படுகிறது.