கோடம்பாக்கத்தில் நிகழ்ந்த ஒரு சிறு மோதல், ஒரு இளம் ஏசி மெக்கானிக்கின் உயிரைப் பறித்த துயரச் சம்பவமாக மாறியுள்ளது. சென்னை வடபழனி ஈஸ்வர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் 24 வயதுடைய நந்தகுமார் (என்ற வினோத்). பன்னிரண்டாம் வகுப்பு படித்துவிட்டு ஏசி மெக்கானிக்காகப் பணியாற்றி வந்த இவர், கடந்த ஜூன் 18-ஆம் தேதி இரவு தனது நண்பர்களான உணவு டெலிவரி ஊழியர் விக்னேஷ் (23) மற்றும் நரேந்தர் (24) ஆகியோருடன் கோடம்பாக்கம் யுனைடெட் காலனி பகுதிக்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு தேநீர்க் கடையில் சிகரெட் வாங்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
தேநீர்க் கடையில் சிகரெட் வாங்கிவிட்டுத் திரும்பிய விக்னேஷ், அங்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், மது போதையில் விக்னேஷின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தகாத வார்த்தைகளால் பேசித் தாக்கத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்த வினோத் ஓடிவந்து இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அந்த இளைஞருடன் இருந்த மேலும் 5 பேர் சேர்ந்து வினோத்தையும் விக்னேஷையும் சரமாரியாகத் தாக்கினர். இதில் வினோத்தைக் கீழே தள்ளி, அவரது தலையில் காலை வைத்து மிதித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் வினோத் மயங்கி விழுந்தார். உடனே நரேந்திரன் தனது நண்பர்களின் உதவியோடு 108 ஆம்புலன்ஸ் மூலம் வினோத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். காயமடைந்த விக்னேஷ் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை முடிந்து விக்னேஷ் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், விக்னேஷ் மீது மோதிய நபர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பதும், அவரோடு சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பிரின்ஸ் வில்லியம் (26), சினிமா உதவி இயக்குநர் விஷால் (27) மற்றும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையரின் மகன்களான மார்ஷல் (30), நிதிஷ் (26) ஆகிய ஐந்து பேர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் ஐந்து பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வினோத் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் கோடம்பாக்கம் போலீசார் இந்த வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
