தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு அளித்து, தவெக கூட்டணியில் இணைவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தத் திடீர் அரசியல் நகர்வு திமுக வட்டத்தில் கடுமையான அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ குறித்து அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “என் தந்தை வைகோ மிகவும் கோபக்காரர்; அவரால் இனி இந்தக் கட்சியை நடத்த முடியாது. அதனால் நான் மதிமுகவைக் கலைத்துவிட்டு உங்களுடனேயே (திமுகவில்) சேர்ந்து கொள்கிறேன் என்று துரை வைகோ என்னிடம் கூறினார்” என நேரு பகிரங்கமாகத் தெரிவித்தார்.
நேருவின் இந்தக் குற்றச்சாட்டுக்குத் துரை வைகோ கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “உதயநிதியை வைத்து அரசியல் செய்ய முடியாது என்றும், கலைஞர் காலத்தோடு அரசியல் முடிந்துவிட்டது என்றும் கூறியவர்தான் இந்த கே.என்.நேரு” எனத் திருப்பிக் கூறிய துரை வைகோ, திமுக கூட்டணியில் இருந்தபோது தங்களை அவதூறாகப் பேசியதாகவும், பண்ணையார் அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், “தனிமனிதத் தாக்குதலுக்கு நான் அஞ்சமாட்டேன், என்னை யாரும் மிரட்ட முடியாது, எனக்கும் பல ரகசியங்கள் தெரியும்; தேவைப்பட்டால் அனைத்தையும் பேச வேண்டியிருக்கும்” என எச்சரித்துள்ளதால் அரசியல் களம் மேலும் சூடடைந்துள்ளது.
