தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.
சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் வின்னர் படத்தில் அப்படி தான் எடுத்த ஒரு முடிவு பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “நான் இப்போது ஒரு தகவல் சொன்னா பலருக்கும் ஆச்சர்யமா இருக்கும். வின்னர் படத்தில் முதலில் ஹீரோயினா நடிக்க கமிட் ஆனது கிரண் இல்லை. வேறொரு நடிகைதான். அவங்கள வச்சு ஒரு பாட்டு சில சீன்ஸ் எல்லாம் எடுத்துட்டோம். ஆனால் ரெண்டாவது ஷெட்யூல் அப்ப அவங்க வரமறுத்துட்டாங்க.

#image_title
அதனால அப்ப ஜெமினி படம் ரிலீஸாகி கிரண் பேமஸ் ஆனாங்க. அவங்கள் ஹீரோயின் ஆக்கிட்டோம். ஒரிஜினல் ஹீரோயின் வச்சு எடுத்த மத்தாப்பூ சிரிப்புக்காரி பாடலில் கிரணை மேட்ச் பண்ண தனியாக அவரை சென்னையில் வச்சு ஷூட் செய்தோம். அந்த பாடலை பார்த்தீர்கள் என்றால் அதில் கிரண், பிரசாந்த்தோடு சேர்ந்து ஆடவே மாட்டார். இன்னொரு தகவல் என்னவென்றால் ஒரிஜினல் ஹீரோயினாக நடித்தவர் சம்மந்தப்பட்ட சில காட்சிகளும் அந்த பாடலில் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
