சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் நடைபெற்ற இளைஞர் எழுச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, விரதம் இருப்பதன் அவசியம் குறித்தும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இன்றைய காலக்கட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், முறையான விரத முறைகள் மூலம் இத்தகைய பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்.
அண்ணாமலை பேசுகையில், மனித உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதைக் கட்டுப்படுத்த விரதம் ஒரு சிறந்த வழியாகும் என்று தெரிவித்தார். குறிப்பாக, 24 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்கும்போது, புற்றுநோய் செல்களுக்குத் தேவையான ஆற்றல் தடைபடுவதால் அவை அழிய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார். “நமது முன்னோர்களுக்குக் புற்றுநோய் பாதிப்பு அதிகம் ஏற்படாததற்குக் காரணம் அவர்கள் கடைபிடித்த விரத முறைகளே” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், வாரத்திற்கு ஒருநாள், குறிப்பாகச் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது உடலைத் தூய்மைப்படுத்த உதவும் என்றார். அதேபோல், கந்த சஷ்டி போன்ற காலங்களில் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்தால், உடலில் மறைந்திருக்கும் புற்றுநோய் செல்கள் மொத்தமாக அழிந்துவிடும் என்றும், இளைஞர்கள் யோகா மற்றும் உடற்பயிற்சிகளைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
