நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியரின் மூத்த மகள் அவந்திகாவிற்கும், ஸ்ரவண் ஸ்ரீனிவாசனுக்கும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தை மிகவும் எளிமையாகவும், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையிலும் நடத்த பெற்றோர் முடிவு செய்திருந்தனர். முன்னதாக நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணக் கொண்டாட்டங்கள் இனிதே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதல்முறையாக குடும்ப புகைப்படங்களையும், திருமண சடங்குகளின் நெகிழ்ச்சியான தருணங்களையும் பகிர்ந்துள்ளார். கணவர் சுந்தர்.சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா மற்றும் மருமகன் ஸ்ரவண் ஆகியோருடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவில், “இந்த தருணத்தில் எங்களது உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை; ஒரு பெற்றோராக குடும்பம்தான் எங்களது வாழ்க்கையின் மையம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதில் தங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு எனக் கூறியுள்ள குஷ்பு, தனது மகள் மற்றும் மருமகனின் புதிய வாழ்க்கைக்கு அனைவரின் அன்பும் ஆசியும் தேவை என்றும் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
