ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவருடைய மகனும் அடுத்த வாரிசாகக் கருதப்படுபவருமான மொஜ்தபா கமேனியின் நிலை குறித்துப் பெரும் மர்மம் நீடிக்கிறது. தனது தந்தை கொல்லப்பட்ட அதே தாக்குதலில் மொஜ்தபாவும் இருந்ததாகவும், அதில் அவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கலாம் அல்லது அவரும் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகிக்கின்றன.
இது குறிப்பாக, இந்தத் தாக்குதலில் மொஜ்தபாவின் மனைவி மற்றும் மகன் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருப்பது ஈரானிய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் அடுத்த உச்ச தலைவராக மொஜ்தபா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கடந்த சில நாட்களாகப் பொதுவெளியில் தோன்றாமல் இருப்பது சந்தேகங்களை வலுப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஈரான் அரசு ஊடகங்கள் மவுனம் காத்து வருகின்றன. இதற்கிடையில், ஈரானின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்றாலும் அவர்கள் இஸ்ரேலின் நேரடி இலக்காகவே கருதப்படுவார்கள் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இதனால் ஈரானின் அடுத்த தலைமைப் பொறுப்பு மற்றும் மொஜ்தபாவின் இருப்பிடம் குறித்த பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
