இறந்து 7 வாரம் ஆகியும்… இன்னும் அடக்கம் செய்யப்படாத கமேனியின் உடல்.. மர்மமாகவே இருக்கும் இடம்… என்ன காரணம்..? ஈரானில் நீடிக்கும் உச்சகட்ட பதற்றம்..!!

By Soundarya on சித்திரை 21, 2026

Spread the love

ஈரானின் உச்ச தலைவராக சுமார் 35 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு ஏற்பட்டு வாரங்கள் பல கடந்தும், அவரது உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருப்பது அந்த நாட்டில் ஒரு அசாதாரண நெருக்கடியை உருவாக்கியுள்ளது. காமேனியின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காமேனியின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதத்திற்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 1989-ல் முந்தைய தலைவர் ருஹோல்லா கொமேனி மறைந்தபோது சுமார் ஒரு கோடி மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். ஆனால் தற்போதைய போர்ச் சூழலில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அது ஈரானின் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையே நிலைகுலையச் செய்துவிடும் என அந்நாட்டு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

   

மேலும், ஈரான் அரசு தற்போது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது. ஒருபுறம் நாட்டின் மிக உயரிய தலைவருக்கு முறையான மற்றும் பிரம்மாண்டமான இறுதிச் சடங்கை நடத்த வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், மறுபுறம் போர் பதற்றம் மற்றும் மக்கள் கிளர்ச்சி குறித்த அச்சம் அவர்களைத் தயங்க வைக்கிறது. இதனால் காமேனியின் சொந்த ஊரான மஷாத் நகரில் பலத்த பாதுகாப்புடன் அல்லது ரகசியமாக உடலை அடக்கம் செய்வது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த இறுதிச் சடங்கு விவகாரம் சர்வதேச அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது.